விளக்கு வைத்த பின்னர் ஜாதகம் பார்ப்பது சரியா?

78

விளக்கு வைத்த பின்னர் ஜாதகம் பார்ப்பது சரியா?

ஜாதகம் பார்க்க செல்பவர்கள் நல்ல நேரத்தில் ஜாதகம் பார்க்க விரும்புவதுண்டு. சிலர் ராகு காலம், எம கண்டம் போன்றவற்றை தவிர்ப்பார்கள். சிலர் மாலை 6 மணிக்கு மேல் ஜாதகம் பார்க்க விரும்புவதில்லை..

அந்தக் காலத்தில் ஜோதிடர்கள் என்றாலே வயதானவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறோம். மேலும் அக்காலத்தில் பல கிராமங்களில் மின் இணைப்புகளே கிடையாது. மின் விளக்கு இல்லாத வீடுகள் பல இருந்தன. அதோடு பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளில் தான் ஜாதகம் எழுதி வைத்திருப்பார்கள். மாலை நேரத்தில் ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு வீட்டில் மின் விளக்கு இல்லாமல், மண்ணெண்ணெய் விளக்கோ அல்லது நல்லெண்ணெய் விளக்குகளின் ஒளிகளைக் கொண்டுதான் ஜாதகம் கணித்துச் சொல்வார்கள்.

இருட்டில் சாதாரணமாக நாம் எந்த வேலைகளையும் செய்ய மாட்டோம் அல்லவா? மின் விளக்கு வரும் வரை நாம் காத்திருக்கின்றோம். அப்படி இருக்கும் போது, நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஜாதகத்தை, சும்மா ஏனோ தானோ என்று பார்த்து விட முடியுமா?. மேலும் அந்த காலத்தில் ஜாதகங்கள் ஓலைச்சுவடியில் குறித்து வைக்கப்பட்டிருந்தன. அதனை வயதான ஜோதிடர்கள் விளக்கொளியில் பார்க்கும்போது, தெளிவாக கணிக்க முடியாத சூழல் உருவாக வாய்ப்புள்ளது.

அதாவது நம் எதிர்காலப் பலன்கள் சொல்லும் போதோ அல்லது திருமணப் பொருத்தம் பார்க்கும் போதோ, அது தவறாக போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எப்படி என்றால் ஓலைச்சுவடியில், புள்ளி இல்லாத எழுத்துக்களைக் கொண்டுதான் ஜாதகம் எழுதி வைத்திருப்பார்கள். (எழுத்தாணி கொண்டு ஓலைச்சுவடியில் புள்ளிவைத்தால் அது கிழிந்து விடும்). அதனால் இரவு நேரம் என்றால் சரியாக பார்த்து படிக்க இயலாது.

உதாரணமாக ஒரு ஜாதகத்தில் சுக்ரன் என்று இருப்பதை ஜோதிடர்கள் அந்த இருள் ஒளியில் சுக்ரனை, சூரியன் என்று படித்துவிட்டு பலன்களை மாற்றி கூறி ஜாதகர்களின் எதிர்காலத்தை மாற்றி பலன் உரைக்க வேண்டி வரும். அதுவே பகல் வேளை என்றால் தெளிவாக பார்த்து பலன்களை சொல்லிவிடலாம். இதன் காரணமாகத்தான் அந்த காலத்தில் இரவு பொழுதில் ஜாதகம் பார்க்க வேண்டாம் என்று ஒரு விதியை வழக்கத்தில் கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் தற்காலத்தில் அதுபோன்ற எந்த பிரச்சினையும் கிடையாது. ஏனெனில் இப்போது மின் வசதிகள் இருக்கிறது. மேலும் ஓலைச்சுவடிகளைப் போல் அல்லாமல், தற்போது கம்ப்யூட்டர், கைகளால் எழுதுவது என்று எதுவாக இருந்தாலும் புள்ளி வைத்து எழுகிறோம். இதனால் எழுத்துக்கள் தெளிவாகத்தெரியும். அந்த காலகட்டம்போல் இந்தக் காலத்தில் எந்த பிரச்சினைகளும் இல்லாததால் நாம் எளிதாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கூட ஜோதிடரிடம் அணுகி ஜாதகம் பார்க்க இயலும். எனவே, மாலை மற்றும் இரவு நேரங்களில் ஜாதகம் பார்க்கக் கூடாது என்ற மூட நம்பிக்கைகளை நாம் களைவது மிக முக்கியமானதாகும்.

இதே போன்று செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமைகளின் போது ஜாதகம் பார்க்கக் கூடாது என்ற கருத்துக்களும் தவறானதாகும். திருமண சுப முகூர்த்தம், தொழில் தொடங்கும் நாள் மற்றும் நேரம், கல்வி கற்க ஆரம்பிக்கும் நாள் குறிப்பதற்காகத்தான் நாம் நல்ல நேரம் பார்க்க வேண்டுமே தவிர, இதுபோன்ற ஜாதகம் பார்ப்பதற்கெல்லாம் அது தேவையில்லை என்பதே இந்த சந்தேகத்திற்கான விளக்கம் ஆகும் .