பாட்டியின் ஸ்பெஷல் குழம்பு பொடி

647

பொதுவாக நாங்கள் எங்கள் வீட்டில் அனைத்து வகை குழம்புகளுக்கும், எங்கள் வீட்டில் தயார் செய்த குழம்பு பொடி மட்டுமே பயன்படுத்துவோம்… வீட்டில் தயார் செய்த குழம்பு பொடி என்பதால் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்… அதேபோல் இந்த குழம்பு பொடி அதிக சுவை தருவதுடன், தரமானதாகவும் இருக்கும்…

சரி வாங்க எங்கள் வீட்டில் எனக்கு சொல்லி தந்த பாட்டியின் ஸ்பெஷல் குழம்பு பொடி செய்முறை விளக்கத்தை பற்றி இந்த பகுதியில் தெரிந்து கொள்வோம் வாங்க..!

குழம்பு பொடி செய்முறை..!

குழம்பு பொடிக்கு தேவையான பொருட்கள் :-

மிளகாய் வத்தல் – 1 கிலோ,
மல்லி விதை – 1 கிலோ,
மஞ்சள் – 200 கிராம்,
சோம்பு – 100 கிராம்,
பெருங்காயம் – 200 கிராம்,
கடுகு – 75 கிராம்,
வெந்தயம் – 75 கிராம்,
கசகசா – 50 கிராம்,
பச்சரிசி – 100 கிராம்,
சீரகம் – 200 கிராம்,
மிளகு – 100 கிராம்,
துவரம் பருப்பு – 100 கிராம்,
உளுந்து – 100 கிராம்,
கடலை பருப்பு – 200 கிராம்,
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி,
பாட்டியின் ஸ்பெஷல் குழம்பு பொடி செய்முறை .!

குழம்பு பொடி செய்முறை

மிளகாய் வற்றல் மற்றும் மல்லி விதையினை இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.

மிளகாவானது அழுத்தி பார்க்கும் போது நொறுங்கும் அளவிற்கு மிளகாய் காய்ந்திருக்க வேண்டும்.

மிளகாய் மற்றும் மல்லி விதை நன்கு காய்ந்தவுடன் காற்று புகாத அளவிற்கு ஒரு பையில் போட்டு இறுக்கமாக கட்டி வைக்கவும்.

குழம்பு பொடி செய்முறை ஸ்டேப் (kulambu podi seivathu eppadi in tamil): 2

பின்பு மேல் கூறப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக வறுக்க வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு வாணலியில் வைத்து, பச்சரிசியை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். அரிசியை வறுத்த பின்பு காயவைத்து தனியாக எடுத்து வைத்துள்ள மிளகாய் வற்றலில், வறுத்த இந்த அரிசியை கொட்ட வேண்டும்.

குழம்பு பொடி செய்முறை ஸ்டேப் (kulambu podi seivathu eppadi in tamil): 3

அதன் பிறகு சீரகம், சோம்பு, கடுகு, மிளகு, வெந்தயம், கசகசா, மஞ்சள் ஆகியவற்றை வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்து மிளகாய் வற்றலில் கொட்ட வேண்டும்.

அடுத்ததாக கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் பொன்நிறமாகும் வரை வறுத்து எடுத்து மிளகாய் வற்றலில் கொட்டிவிடவும்.

குழம்பு பொடி செய்முறை ஸ்டேப் (kulambu podi seivathu eppadi in tamil): 4

இதை தொடர்ந்து கட்டிப் பெருங்காயத்தையும் வெறும் வாணலியில் போட்டு பொரியும் வரை வறுத்து கலவையில் கொட்டவும்.

இறுதியாக கறிவேப்பிலையை உருவி வெறும் வாணலியில் போட்டு மொறு மொறுவென்று வரும் வரை வறுத்து கலவையில் கொட்டவும்.

இந்த வறுத்த அனைத்து கலவைகளும் நன்கு ஆறியதும் மிஷினில் கொடுத்து நைசாக அரைத்து கொள்ளவும்.

குறிப்பு:

மசாலா பொருட்களை வறுக்கும் போது, அடுப்பை மிதமான சூட்டில் வைத்துதான் வறுக்க வேண்டும்.

மிளகாய் மற்றும் மல்லி விதையினை நன்கு வெயிலில் காயவைத்திருக்க வேண்டும். சரியாக காய வைக்காவிட்டால் குழம்பு மசாலா பொடி (Kulambu Podi) சீக்கிரமாக கெட்டுபோய்விடும்.

மிஷினில் அரைத்த மசாலா பொடியினை நன்கு காயவைத்து, காற்று புகாத டப்பாவில் அடைத்து பயன்படுத்துங்கள். இவ்வாறு செய்வதினால் மசாலா பொடி மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

இந்த மசாலா பொடியினை சாம்பார், புளிக்குழம்பு, ஆட்டு கறி குழம்பு, கோழி குழம்பு என்று அனைத்து வகை சைவ மற்றும் அசைவ குழம்புகளுக்கும் பயன்படுத்தலாம்.