தியாகராஜ சுவாமிகள் – பகுதி 11

425

சற்குரு தியாகராஜ சுவாமிகளின் சமாதிக் கோயிலும் அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் இசை விழாவையும் கண்டு கேட்டு ரசிக்கும் இந்த வேளையில் இவர் போன்ற மகான்களை நினைவுகூறுவது அவசியம். ஒவ்வோராண்டும் தை மாதம் பகுள பஞ்சமி திதியில் சுவாமிகளின் குருபூஜையை சங்கீத உற்சவமாகக் கொண்டாடி வந்தார்கள். தியாகராஜ சுவாமிகளின் ஆராதனையில் நடைபெற்ற கச்சேரிகளில் பெண் வித்வான்களை மேடையில் அமர அனுமதிப்பல்லை என்ற வழக்கம் இருந்து வந்தது. நாகரத்தினம்மாள் வந்த பிறகு இந்த நிலையை மாற்ற நினைத்தார். அவர் பெண்களை மட்டுமே வைத்து சமாதியின் பின்புறம் கச்சேரிகளை நடத்தத் தொடங்கினார். இதற்கான செலவுகளை நாகரத்தினம்மாளே ஏற்றுக் கொண்டார். மற்ற இரு பிரிவினரான சின்ன கட்சி, பெரிய கட்சி இவர்களில் வாய்ப்பு கிடைக்காத ஆண் வித்வான்களுக்கும் நாகரத்தினம்மாள் தனது கச்சேரி மேடைகளில் வாய்ப்பு நல்கத் தொடங்கினார். இவர்கள் நடத்திய இசை ஆராதனை பெரும்பாலும் பெண்களே பாடும் நிகழ்ச்சியாக இருந்தது. சுவாமிகளின் ஆராதனையை மூன்று கட்சிகளாகப் பிரிந்து தனித்தனியே நடத்தி வந்தார்கள். சமாதிக்கு அருகே மராட்டிய ராணி துர்க்காபாயி எனும் அம்மையாருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தை விலைக்கு வாங்கி அங்கு மணல் நிரப்பி மேடாக்கி அந்த இடத்தையும் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

முதலில் ஒரு கட்சி தனது ஆராதனை விழாவை உயர்நிலைப் பள்ளி மைதானத்திலும், மற்றொரு கட்சி கல்யாண மகாலிலும், மூன்றாவதாக நாகரத்தினம்மாள் குழுவினரின் ஆராதனை சமாதிக்கருகிலும் நடத்தினார்கள். இப்படித் தனித்தனியே பிரிந்து நடத்தியதன் விளைவு விபரீதமாகப் போகக்கூடாது என்று கருதி 1940ஆம் வருஷத்தில் செம்மங்குடி சீனிவாசய்யர், கும்பகோணம் ராஜமாணிக்கம் பிள்ளை, முசிரி சுப்பிரமணிய ஐயர் ஆகியோர் கூடிப்பேசி அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே இடத்தில் ஆராதனையை நடத்துவதென்று தீர்மானித்து அதுமுதல் அங்ஙனமே நடைபெற்று வருகிறது. ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா. அவரது ஆராதனை விழா முன்பே கூறியபடி தை மாதம் பகுள பஞ்சமி தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இசைக் கலைஞர்களும், வாத்தியக் கலைஞர்களும், இசை ரசிகர்களும் பெருமளவில் வந்து கூடுகின்றனர். சற்குருவின் சந்நிதியில் பாடுவது தங்களுக்கு அவரது ஆசி பரிபூரணமாக அமைவதாக அனைவரும் நம்புகின்றனர்.

ஒரு வாரம் வரை நடைபெறும் இவ்விழாவில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கு கொள்கின்றனர். நாள் முழுவதும், நள்ளிரவு வரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அதுவரை பந்தல் நிறைந்த ரசிகர்கள் கூட்டம் அமைதியாக ரசிக்கிறது. புஷ்ய பகுள பஞ்சமி அன்று காலை திருமஞ்சன வீதியில் ஸ்ரீ தியாகையர் வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி புறப்படுகிறது. மிக மூத்த இசைக்கலைஞர் இதற்குத் தலைமை தாங்கி உஞ்சவிருத்தி எடுக்கிறார். பின்னால் வேத கோஷங்கள் முழக்கிக் கொண்டும், ஸ்ரீ தியாகையர் கீர்த்தனைகள் பாடிக்கொண்டும் பக்தர்கள் செல்கிறார்கள். அவர்கள் ஸ்ரீ தியாகராஜர் சமாதி சந்நிதிக்கு வரும் சமயம் ஆராதனை நடைபெறும் பந்தல் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்து வழியும். மேல்சட்டை அணியாமல் மேல் வஸ்த்திரம் மட்டும் அணிந்தவர்கள் சமாதிக்கு எதிரே இரு வரிசையாக நடுவில் வழிவிட்டு அமர்ந்துகொண்டு ஆராதனையைத் தொடங்குகிறார்கள்.

காலை முதல் மங்கள் இசை வாசிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து புல்லாங்குழல் கலைஞர்கள் வாசிக்கும் கீர்த்தனையைத் தொடர்ந்து பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகள் பாடப்படுகின்றன. தமிழகத்தின் முன்னணி இசைக் கலைஞர்கள் அனைவரும் ஒரே இடத்தில் உட்கார்ந்து பக்தி சிரத்தையுடன் இந்த பஞ்ச ரத்தினத்தைப் பாடுவதைக் கேட்பதே ஒரு இன்ப அனுபவம். இந்த பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகள் நாட்டை, கெளளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ஆகிய ராகங்களில் அமைந்தவை. இது பாடி முடிந்ததும் சுவாமிகளுக்குத் தீபாராதனை நடைபெறும். ஸ்ரீ தியாகப்பிரஹ்ம ஆராதனை சபா சார்பில் மிகச் சிறப்பாக ஆராதனை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவையாற்றுக்குப் பெருமையும், புகழும் சேர்த்துக் கொடுப்பதில் இந்த ஆராதனை விழாவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது கபிஸ்தலம் ஸ்ரீ ரங்கசாமி மூப்பனார் அவர்கள் தலைமையில் விழாவை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். சென்னை தொழிலதிபர் டெக்கான் மூர்த்தி அவர்கள் இங்கு வருகைதரும் பக்தர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் விழாவின் எல்லா நாட்களிலும் உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளார்கள். விழாவின் எல்லா நாட்களிலும் திருவையாறு நகரமே மக்கள் கூட்டத்தால் குலுங்கும்.

இசைவிழாவின் போது சமாதிக்கெதிரே இசைக்கச்சேரிகள் நடைபெறும் கொட்டகைக்குச் செல்லும் வழியெங்கும் ஏராளமான கடைகள் அமைக்கப்படும். இசை நூல்கள், இசை வாத்தியங்கள், கேசட்டுகள் குறுந்தகடுகள் இவை விற்பனை தவிர அரசாங்க, வங்கி அலுவலகங்களும் திறக்கப்பட்டிருக்கும். தென்னக ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்ய வசதியும் இங்கு செய்து தரப்பட்டிருக்கிறது. அஞ்சல் துறையின் அலுவலகமும், தொலைத் தொடர்புத்துறை சார்பில் தொலைபேசி, டெலக்ஸ் ஆகிய வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.

செயலாளர், இணைச் செயலாளர் ஆகியோருக்கு இந்த வளாகத்திலேயே தற்காலிக அலுவலகம் திறக்கப்படுகின்றன. கலைஞர்கள் வந்து தங்குவதற்கு அறைகளும், உணவுக்காக பெரிய ஹாலும் கட்டப்பட்டுள்ளன. திருவையாறு பாரதி இயக்கம் பல்வேறு பதிப்பகத்தாரின் ஆயிரக்கணக்கான புத்தகங்களைக் காட்சிக்கு வைத்திருப்பதோடு விற்பனையும் செய்து வருகிறார்கள். ராமகிருஷ்ண மடத்து நூல்கள் மற்றும் பல புத்தக வெளியீட்டாளர்களும் தங்கள் புத்தகங்களை இங்கு விற்பனை செய்கிறார்கள். நிறைவு நாளன்று இரவு ஆஞ்சநேயர் உத்ஸவமும், நாதஸ்வர வித்வான்களின் மல்லாரி இசையுடனும் விழா நிறைவு பெறுகிறது.