Monday, October 23, 2023
HomeMahansஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு – Part 2

ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு – Part 2

தன்னை நெருங்க முடியாமல் தவிக்கும் மனைவி சரஸ்வதியின் ஆவியைக் கண்ட ராகவேந்திரர், அவள் அவதியைப் போக்க மனம் கொண்டார். புனித நீரை அவள் மீது தெளித்து, புண்ணிய லோகம் செல்ல வழி செய்தார். அதோடு, அவளது பெயரால் வஸ்திர தானம் நடத்தப்பட வேண்டும் என்றும் நியமம் செய்தார். சுதீந்திரரின் சீடராக இருந்தபோதே, தமது ஞானஅறிவு, பூவின் மணம்போல் பரிமளிப்பதை உணர்த்தி பரிமளாச்சாரியார் என அழைக்கப்பட்ட ராகவேந்திரர், குருவின் மறைவுக்குப்பின் தலைமை ஏற்றபோது, மேலும் அதனை நிரூபித்தார். மத்வ பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற சில ஆண்டுகளுக்குப்பின், தீர்த்த யாத்திரை புறப்பட்டார் ராகவேந்திரர். உடுப்பி, பண்டரி புரம், கொல்லாபுரம், கர்நூல் என அவர் பாதம் பதித்த தலங்கள் யாவும் புண்ணியத் தலங்களாயின.

அவரது பயண வேகத்தை விடவும் வேகமாக, அவரது ஞானமும், அறிவும், உயர்வும், பெருமையும் எங்கும் பரவியது. புனிதப் பயணத்தின்போது கர்நாடகாவில் உள்ள ஆதாவானி எனும் ஆதோனிக்குச் சென்றார், ராகவேந்திரர். அங்கே அநாதைச் சிறுவன் ஒருவன் தன் சோகத்தினை அவரிடம் சொன்னான். அவன் பெயரைக் கேட்ட ராகவேந்திரர், “”வெங்கண்ணா, இனி உனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் என்னை நினைத்துக்கொள்… உயர்வடைவாய்!”” என்று சொல்லிவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தார். சில மாதங்களுக்குப் பின், அந்த வழியே வந்த ஹைதராபாத் நவாப், தனக்கு வந்த கடிதம் ஒன்றை வெங்கண்ணாவிடம் தந்து படிக்கச் சொன்னார். படிப்பறிவில்லாத வெங்கண்ணா, ராகவேந்திரரை மனதால் நினைத்தான். மறுகணம், “”மன்னா, இன்னும் சில நாட்களில் உங்கள் ஆட்சியின் கீழ் மேலும் சில நாடுகள் வரப் போவதாக இதில் எழுதியுள்ளது!”” என்று கடிதத்தைப் படித்துச் சொல்ல முடிந்தது அவனால்… நவாப் மகிழ்ந்தார்.

வெங்கண்ணாவை அவ்வூரின் திவானாக நியமித்தார். “ஒருமுறை நினைத்ததற்கே இத்துணை உயர்வா…!” ராகவேந்திரரின் திருநாம மகிமையை வியந்த வெங்கண்ணா, அப்போதுமுதல் தன் சுவாசமாகவே அவரது திருநாமத்தை நினைத்தான். செல்லும் இடமெல்லாம் பலர் சீடர்களாகி ராகவேந்திரரைப் பின்தொடர்ந்தார்கள். பொதுவாக, மகான்கள் மட்டுமே மகிமைகளைப் புரிவார்கள். ஆனால், ராகவேந்திரரோ, தான் மட்டுமல்ல, தன் சீடர்கள், தன் பக்தர்களும்கூட மகிமைமிக்கவர்களே என்பதை பல்வேறு சமயங்களில் உணர்த்தினார். அவரது காஷாய ஆடைகள், அவர் கைப்பட்ட அட்சதை, அவர் தரும் பிரசாதம், மிருத்திகை எனப்படும் புனிதமண் என அனைத்துமே அற்புதங்களை நிகழ்த்தின. ராகவேந்திரர், தமது திருத்தல யாத்திரைக்கு இடையிடையே, வியாசராஜரின் சந்திரிகைக்கு “பிரகாசம்” எனும் உரை; தந்திர தீபிகை எனும் நூலுக்கு “நியாய முக்தாவளி” எனும் உரை என்பதுபோல் பல நூல்களை எழுதினார். வேதத்தின் சாரத்தை பாமரரும் உணரும்படிச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்த ராகவேந்திரர், வேதாந்த உலகுக்கும், கல்விக்கும், மத்வ சித்தாந்தத்திற்கும் உதவும்படி ஏராளமான கிரந்தங்களை இயற்றினார். “புதிது புதிதாக எழுதவேண்டும்; பழைய நூல்களுக்கு புதியதாக அதுவும் எளியதாக வியாக்யானங்கள் (விளக்க உரைகள்) சொல்ல வேண்டும்” என்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்போல், இரவு பகல் பாராமல் எழுதினார் பரிமளாச்சாரியார்.

அவரது நூல்களும் பரிமளம் மிக்கவையாகவே திகழ்ந்தன. ஒருசமயம், ராகவேந்திரரைக் காண வந்த ஜோதிடர்கள் மூவரிடம், தமது ஆயுள் குறித்து கணக்கிட்டுச் சொல்லுமாறு கேட்டார் ராகவேந்திரர். “”தங்களுக்கு 100 வயது”” சொன்னார் ஒரு ஜோதிடர். “”ஸ்வாமிகள் 300 வருடங்கள் இருப்பீர்கள்!”” என்றார் மற்றவர். “”700 ஆண்டுகள் உங்கள் ஆயுள்!”” மூன்றாமவர் சொன்னார். “எப்படி மூவரும் வெவ்வேறு விதமாக கணித்திருக்க முடியும்?” புரியாமல் குழம்பினார்கள் சீடர்கள். அவர்களுக்குப் புரியும்படி ஸ்வாமிகள் சொன்னார். “”என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள்… என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும்… பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!”” “”எங்கே இருக்கிறான் உன் ஹரி!?”” என்று இரண்யன் கேட்டபோது, “”எங்கும் இருக்கிறான்!”” என்று சொன்ன பிரகலாதனின் அம்சமாகவே கருதப்படும் ராகவேந்திரர், சென்ற இடமெலாம் இறைவனின் பெருமையை உணர்த்தினார். பல்வேறு இடங்களில் காலடி பதித்த பின்னர், மீண்டும் ஆதோனிக்கு வந்தார் ராகவேந்திரர். அவரது வருகையை அறிந்து பக்தியோடு ஓடிவந்து பணிவோடு வரவேற்றான் வெங்கண்ணா. அதோடு, பெருமைக்குரிய மகான் வந்திருப்பதாக நவாப்பிடமும் சொன்னார். ராகவேந்திரரின் மகிமையைச் சோதிக்க விரும்பிய நவாப், மாமிசங்கள் நிறைந்த கூடையை, மலர்க்கூடை எனச் சொல்லி அளித்தான்.

புன்முறுவலோடு, புனித நீரைத் தெளித்து அதனை ஏற்றுக்கொண்டார் ராகவேந்திரர். பின்னர், தம் சீடர்களை அழைத்து அந்தக் கூடையைத் திறக்கச் சொன்னார். நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கூடையில் இருந்த புலால், புஷ்பமாக மாறி மணந்து கொண்டிருந்தது. தன் செயலுக்காக வருந்திய நவாப், மன்னிக்கும்படி வேண்டி மகானைப் பணிந்தார். ஆதோனி முழுவதையும் அவருக்கே அளிப்பதாகச் சொன்னார். ஆனால், மாஞ்சாலம் (இன்றைய மந்திராலயம்) கிராமம் மட்டுமே போதும் எனக் கூறி அதனைப் பெற்றுக் கொண்டார் மகான். துங்கபத்ரா நதிக்கரையில் இருந்த அந்த கிராமமே, கிருதயுகத்தில் தாம் பிரகலாதனாக இருந்தபோது யாகம் செய்த பூமி என்பதை உணர்ந்திருந்த மகான், தாம் பிருந்தாவனம் கொள்ள ஏற்ற இடமும் அதுவே என நினைத்தார்.

அங்கே தமக்கு ஒரு பிருந்தாவனம் அமைக்கும்படி வெங்கண்ணாவிடம் சொன்னார். அப்படியே அமைக்கப்பட்டது. கி.பி. 1671_ம் ஆண்டு (விரோதிகிருது) ஆவணிமாதம், கிருஷ்ணபட்சம், துவிதியை திதியுடன் கூடிய வியாழக்கிழமையன்று, தம் சீடர்களையழைத்த ராகவேந்திரர், தாம் பிருந்தாவனப் பிரவேசம் செய்யப் போவதாகச் சொன்னார். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்தபின், சுற்றிலும் பக்தர்கள் சூழ்ந்திருக்க, சீடர்கள் துக்கத்தில் ஆழ்ந்திருக்க, பிருந்தாவனப் பிரவேசம் செய்தார் ராகவேந்திர மகான். அவரது வாக்குப்படியே, இதோ, இன்றும் பிருந்தாவனத்தில் வாசம் செய்து கொண்டுதான் இருக்கிறார்… கற்பக விருட்சமாக, காமதேனுவாக, தன்னை வேண்டுவோர் வேண்டுவன யாவும் தருகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + fifteen =

Most Popular