தியாகராஜ சுவாமிகள் – பகுதி 1

4454

கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பெற்றிருப்பவர் தியாகராஜ சுவாமிகள். கர்நாடக சங்கீதக் கச்சேரிகளில் பெரும்பாலும் இவரது பாடல்களே இடம்பெறுகின்றன. முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற இதர வாக்யேயக்காரர்களின் பாடல்களும் இடம் பெற்றாலும், பிரதானமாகப் பாடப்படுபவை இவரது பாடல்களே. இது நீண்டகாலமாக இருந்து வரும் பழக்கமென்பதை மகாகவி பாரதியாரின் “சங்கீத விஷயம்” எனும் கட்டுரைகளிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். தியாகராஜ சுவாமிகள் தெலுங்கிலும், மற்ற இருவரும் பெரும்பாலும் சமஸ்கிருதத்திலும் பாடியிருக்கிறார்கள். தியாகராஜரின் கீர்த்தனைகளை தெலுங்கு மொழி தெரிந்தவர்கள்தான் என்பதல்லாமல் அம்மொழி தெரியாதவர்களும் உணர்வுபூர்மாக கேட்டு ரசிக்கிறார்கள். உலகமுழுவதிலுமுள்ள சங்கீத ரசிகர்களுக்கு சங்கீதம் என்றால் அது தியாகராஜருடைய சங்கீதம்தான்.

அப்படி இவருடைய பாடல்களில், அதிலும் அந்த மொழி நமக்கெல்லாம் அன்னியமாயிருந்தபோதிலும், மனங்கவரும் காரணம் என்ன என்பதை ஆராய வேண்டும். குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் அவரது பாடல்களில் அடங்கியிருக்கும் பக்தி ரஸமும், பாடல்களின் பொருளும், அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கிற இராகங்களுமே காரணம் என்றால் அது மிகையல்ல. மாணிக்கவாசக சுவாமிகள் பக்தி ரசம் சொட்டச் சொட்ட சிவபெருமானை அழுது புரண்டு மனம் உருகப் பாடியதைப் போல, தியாகராஜ சுவாமிகளும் அவரது இஷ்ட தெய்வமான இராமனை, சீதாபிராட்டியை அவர்கள் வரலாற்றில் காணப்படும் பல நிகழ்ச்சிகளைச் சொல்லிச் சொல்லி பக்தி ரஸத்தோடு பாடியிருப்பதும் அந்தப் பாடல்கள் உயிரோட்டத்தோடு மிளிர்வதற்குக் காரணங்களாகும். அவருக்கு முன்பாகவும் பக்தி ரஸத்தோடு பலர் பாடியிருக்கிறார்கள். அவைகளெல்லாம் அந்தந்த காலங்களில் பாடல் ரஸத்திற்காகவும், பொருளமைதிக்காகவும், இறைவனது பெருமையையும், புகழையும் பாடியிருப்பதனால் அவை பிரபலமாகியிருந்தன. நமது முன்னோர்கள், மகான்கள் இவைபற்றி மிகவும் விரிவாகவும் விளக்கமாகவும் விவாதித்திருக்கிறார்கள்.

இவைகளையெல்லாம் எண்ணிப் பார்க்கின்றபோது, ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சாகித்தியங்கள் என்றென்றும் இந்த புண்ணிய பூமியில் நிலைத்திருக்கும் என்பது திண்ணம். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய ஸாகித்தியங்களை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் அவரது வாழ்க்கையை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவருடைய கீர்த்தனங்கள் எந்த சந்தர்ப்பத்தில் பாடப்பட்டவை, அவற்றைப் பாடுகையில் அவர் மனப்பாங்கு எங்ஙனம் இருந்தது என்பன பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அவருக்கு ஏற்பட்ட சோதனைகள், மன வேதனைகள், குடும்பத்திலிருந்த சூழ்நிலை இவற்றைத் தெரிந்து கொண்டோமானால், அவரது கீர்த்தனங்களில் இழையோடும் அந்தந்த பாவங்கள், ரஸங்கள் நமக்குத் தெளிவாகும். ஸ்ரீ இராமபிரானைப் பற்றியும் சீதாதேவி பற்றியும் அவர் பாடியுள்ள பாடல்கள் அனைத்தையும் பார்க்கும்போது, அவர் ஏதோவொரு மானசீகமான உலகத்தில் அவர்களோடு நெருங்கிப் பழகி, அவர்களோடு உரையாடியது போலவும், அந்த உரையாடலைத் தொடர்ந்து ‘இராமா, நீ இப்படிச் செய்யலாமா? நீ ஏன் கருணை காட்ட மறுக்கிறாய்,

அன்று நீ அப்படிச் சொன்னாயே’ இப்படியெல்லாம் அவர் சொல்வது அவர் வாழ்ந்த உலகம் தனி, அந்த உலகத்தில் இராம சீதா, லக்ஷ்மண அனுமன் போன்றோர் மட்டுமே இருந்தனர் என்பதும் நமக்குத் தெரியவரும். ஸ்ரீ தியாகராஜர் எந்த உணர்வில் இருந்தார், லோகாயதமான விஷயங்களில் அவருக்கு அக்கறை இருந்ததா என்பது போன்ற கேள்விகள்கூட நமக்கு எழலாம். இல்லாவிட்டால் சரபோஜி மன்னன் அவரை அழைத்துப் பொன்னும் பொருளும் தர விரும்பியபோதும், அதற்குச் சம்மதிக்காமல், இவைகள் சுகம் தரக்கூடியவைகளா, அல்லது இராமா உனது சேவடி கைங்கர்யம் சுகம் தருமா என்றெல்லாம் பாடியிருப்பாரா? வேதங்கள் எப்படி எழுதப்படாமல் வாய்மொழியாகத் தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருக் கிறதோ, அப்படியே, மகான்களின் பாடல்களும் வரிசைப்படுத்தியோ, ஸ்வரப்படுத்தியோ, எழுதிவைத்தோ பிற்கால தலைமுறையினருக்கு கொடுக்கப்படாமல், குருமார்களிடம் கற்றுக்கொண்ட சீடர்களின் மூலமே இன்றுவரை வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத்தானோ என்னவோ, ஒருசிலர் அவர் பாடிய தெலுங்கு மொழிச் சொற்களைச் சில இடங்களில் தவறாகக்கூட உச்சரிக்கிறார்கள். இதற்கு முன்பு ஸ்ரீ தியாகராஜருடைய வாழ்க்கை வரலாற்றைப் பலரும் எழுதியிருக்கிறார்கள். திருவையாறு க்ஷேத்திரத்தைப் பற்றிக் கூற வரும்போது, ஸ்ரீ தியாகராஜருடைய வாழ்க்கையையும் சாதனைகளையும், அவருடைய பெருமையையும் சொல்லாவிட்டால் முழுமையடையாது.

நாதத்தின் பெருமை.

நாதம் அல்லது ஒலி என்றால் என்ன பொருள்? இதற்கு மகான்கள் நல்ல விளக்கங்களைக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள். “நா” என்று சொன்னால் பிராணன் அல்லது உயிர், “த” என்றால் அக்னியென்றும் கூறியிருக்கிறார்கள்.

இவையிரண்டும் சேரும்போது ஏற்படும் ஒலியே “நாதம்” எனப்படும். இந்த நாதமே “ஓம்” எனும் ஓங்கார மந்திரமானதென்று கூறுகிறார்கள். சிவபெருமானின் முகங்களிலிருந்து தோன்றியவையே சப்தஸ்வரங்கள் எனப்படும். எனவே குருமுகமாய் கேட்டு, அறிந்து பழகும் ஸங்கீத ஞானம் இல்லாமல் மோக்ஷம் கிடைக்குமா? ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் “மோக்ஷமு கலதா” எனும் ஸாரமதி இராகக் கீர்த்தனையில் இப்படிச் சொல்லுகிறார். “உன்னுடைய சிறந்த பக்தியோடு கூடிய ஸங்கீத ஞானம் இல்லாதவர்களுக்கு மோக்ஷம் கிடைக்குமா? அந்தப் பாடலின் முழு அர்த்தத்தையும் இப்போது பார்க்கலாம். “இந்தப் பூவுலகில் ஜீவன் முக்தருக்கன்றி மற்றவர்களுக்கு மோட்ச கதி கிடைக்குமா? எப்பொழுதும் பிரத்தியட்சமான உருவத்தை உடையவனே! ராமா! உன்னிடம் பக்தியும் ஸங்கீத ஞானமும் இல்லாதவர்களுக்கு மோட்சம் கிடைக்குமா? பிராணவாயு, நெருப்பு ஆகியவற்றின் சேர்க்கையினால் பிரணவநாதம் சப்தஸ்வரங்களாகப் பெருக, வீணை வாசிப்பதன் மூலம் நாதோபாசனை செய்யும் சிவபெருமானின் மனப்போக்கை அறியாதவர்க்கு மோட்சம் உண்டா?” என்கிறார். ஆகவே இசை மார்க்கமே மோட்சத்துக்கு வழி என்பது அவரது முடிவு

…….தொடரும்