ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஆராதனை!
சித்த புருஷராய், அருணாச்சலேஸ்வரர் மீது
அபரிமிதமான பக்தி கொண்ட பித்தராய்
காமாஷி அன்னையின் அருள் நிறைந்த
அழகு வடிவமாய் திகழ்ந்தவர்
நாற்பது ஆண்டுக்காலம் அருணையிலே
வாசம் செய்து அங்கேயே அடங்கிவிட்ட
மாபெரும் யோக புருஷர்
தவத்தில் மூழ்கியிருந்த
மகரிஷி ரமணரை இவ்வுலகிற்கு
கண்டெடுத்து காத்து
நமக்களித்த கருணை வள்ளல்
களங்கமற்ற அன்போடு
காலடியில் வீழ்ந்தவர்களை
கருணையோடு கைதூக்கி
அபயமளித்து காத்த
அம்பிகையில் புதல்வன்
எத்தர்களையும், ஏமாற்றுக்காரர்களையும்,
ஓட ஓட விரட்டிய மகான்
அவரை சோதிக்க நினைத்தவர்களை
வீதிக்கு செல்லவைத்தவர்
வணங்கியவர்களின்
வறுமையை ஓட்டிய கற்பக தரு
தீராத நோய்களையும்
தீர்த்து வைத்த தன்வந்திரி பகவான்
இன்றும் அவரை நினைத்து
வழிபடுவோரின் வினைகளை வேரறுத்து
வளமான வாழ்வை அளிப்பவர்.
அவர் மிகவும் போற்றி
பரவியது ராமநாமம்
அவரைப் போற்றி பணிவோம்.
இராம நாமம் சொல்லுவோம்.
இந்த ஜன்மம் கடைத்தேற
திருவண்ணாமலையில் அவர் அடங்கிய
திருக்கோயிலில் ஆராதனை
விமரிசையாக நடக்கும்
வாழ்வில் ஒரு முறையாவது
அங்கு சென்று பணிந்தால் நம்மை
வாட்டும்வினைகள் காணாமல் போய்விடும்
அந்த மகானின் கருணையினால்.
எளிமையின் சின்னமாக விளங்கிய, சேஷாத்ரி சுவாமிகளின் தரிசனம், அகந்தையை அழித்து, ஞானத்தை அளிக்கும்!
நினைக்க முக்தி தரும், அண்ணாமலையில் உறையும் சேஷாத்ரி சுவாமிகள், ஈசனின் தங்கக் கை மைந்தன் அல்லவா!
ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே சரணம் !
ஸ்ரீ குருப்யோ நமஹ !
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு கணக்கு சரியாக வரவில்லை. மற்றப் பாடங்களில் நல்ல மதிப்பெண் பெற்றார். கணக்கு வராததால் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.
பள்ளிக்கு எதிரே ஒரு சத்திரம் இருந்தது. அங்கே சில சமயம் சேஷாத்ரி சுவாமிகள் வந்து உட்கார்ந்து கொள்வதுண்டு. அவரிடம் மாணவர்கள் சென்று தாங்கள் ‘பாஸா’ ‘பெயிலா’ என்று கேட்பது வழக்கம். அவரும் சிலரிடம் ‘பாஸ்’ என்பார். சிலரை ‘பெயில்’ என்று சொல்வார். இது அவருக்கு ஒரு விளையாட்டு. ஆனால் அவர் சொன்னபடியேதான் எப்பொழுதும் நடக்கும் என்பதால் அவர் அங்கு வந்தால், அவரைச் சுற்றி எப்பொழுதும் மாணவர்கள் கூட்டம் இருக்கும்.
ஒருநாள் மகான் அங்கே உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தார் ராமச்சந்திரன். அவர் அருகே சென்று வணங்கினார். எனக்கு கணக்கு சரியாக வரவில்லை. மகான்தான் அருள் புரிய வேண்டும்” என்று மகானை வணங்கிக் கண்ணீர் சிந்தினார். “போ.போ எல்லாம் நன்னா வரும்” முதுகில் தட்டிக் கொடுத்த மகான் போய் விட்டார்.
அதன்படியே ராமச்சந்திரன் அந்த ஆண்டு கணக்கில் முதன்மையாகத் தேறினார். பிற்காலத்தில் அரசில் உயர் பதவியும் வகித்தார். இப்படி பலருக்கு அவர்களது வருங்காலம் குறித்து உரைத்திருக்கிறார் மகான் சேஷாத்ரி.
