தியாகராஜ சுவாமிகள் – பகுதி 4

477

ஸ்ரீ தியாகராஜரை சந்தித்த ஆன்றோர்கள்.

சியாமா சாஸ்திரிகள்:- சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் (1762-1827) தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் பூஜை உரிமை பெற்ற பரம்பரையைச் சேர்ந்தவர். தெலுங்கு, சமஸ்கிருதம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் அம்பிகையைப் பாடியவர். தியாகராஜரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்த சியாமா சாஸ்திரிகள் அடிக்கடி திருவையாறு வந்து தியாகராஜரைக் கண்டு அளவளாவுவது வழக்கம். அத்தகைய சந்திப்புக்களில் தம்முடைய பாடல்களைத் தியாகராஜரிடம் பாடிக்காட்டுவாராம்.

கோபாலகிருஷ்ண பாரதியார்:- இவர் மாயூரத்தில் வசித்து வந்தார். திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை காலத்தில் வாழ்ந்தவர். அவரோடு நல்ல பழக்கம் உள்ளவர். நந்தனார் சரித்திரம் எனும் இசை நாடக வடிவத்தையும், வேறு பல தமிழ் சாகித்யங்களையும் இயற்றி பெரும் புகழ் பெற்றவர். இவர் காலம் 1811 முதல் 1881 வரையிலானது. தமிழ்த்தாத்தா என்று பிற்காலத்தில் புகழ்பெற்று பழைய சங்க இலக்கியங்களை வெளிக்கொணர்ந்து பதிப்பித்து தமிழ் வாழ பாடுபட்ட உ.வே.சாமிநாதய்யர் ஸ்ரீமான் பிள்ளையவர்களிடம் கல்வி பயின்று வந்த காலத்தில் மாயூரத்தில் சில காலம் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் இசை பயின்று வந்திருக்கிறார். பிறகு பிள்ளையவர்கள் உ.வே.சாவிடம் நீ தமிழ் படிக்க வேண்டுமா, அல்லது சங்கீதம் பயில வேண்டுமா என்பதை முடிவு செய்துகொள் என்று சொன்னபின்,கோபாலகிருஷ்ணபாரதியாரிடம் இசை பயில்வதை நிறுத்திக் கொண்டு, பிள்ளையவர்களிடம் தமிழை மட்டும் படிக்கலானார் என்று அவரது ‘சுயசரிதை’ கூறுகிறது. கோபாலகிருஷ்ணபாரதியார் சற்குரு ஸ்ரீ தியாகராஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு திருவையாறு வந்தார். ஸ்ரீ தியாகராஜர் தன் வீட்டில் சீடர்களுக்கு ஆபோகி ராகக் கீர்த்தனையைப் பாடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்து கோபாலகிருஷ்ண பாரதியார் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். குருநாதர் பாடம் சொல்லிவிட்டு காவிரிக்குச் சென்று ஸ்நானம் செய்து வருவதற்காக வாயிற்புறம் வந்தபோது திண்ணையில் உட்கார்ந்திருக்கும் கோபாலகிருஷ்ண பாரதியாரை யார் என்று விசாரித்தார். தான் மாயூரத்திலிருந்து வருவதாக பதில் சொன்னார். அப்படியானால் அங்கு தமிழில் சிறப்பான பாடல்களை இயற்றிப் பாடுகிறாரே கோபாலகிருஷ்ண பாரதியார் அவரை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டார். அடியேன்தான் அந்த கோபாலகிருஷ்ண பாரதி என்றார் இவர். தியாகராஜருக்கு மிக்க மகிழ்ச்சி. வந்திருக்கும் விருந்தினரை வரவேற்று உபசரித்தார். நீங்கள் ஆபோகியில் ஏதாவது பாடல் இயற்றிப் பாடியிருக்கிறீர்களா என்றார். இதுவரை இல்லை என்று இவர் பதிலிறுத்தார். சரி இருங்கள் நான் போய் காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்துவிடுகிறேன் என்று சென்றவர் வீடு திரும்பியதும், பாரதி சொன்னார் நான் இப்போது ஆபோகியில் ஒரு பாடல் இயற்றியிருக்கிறேன் என்று. அப்படியா சரி பாடுங்கள் என்றார் தியாகராஜர். கோபாலகிருஷ்ண பாரதியார் பாடினார். “சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா – தில்லை சபாபதிக்கு” என்று தொடங்கும் பாடல் அது. தான் காவிரிக்கு ஸ்நானம் செய்து திரும்புமுன் இப்படியொரு கீர்த்தனையை இவர் இயற்றியது கண்டு சுவாமிகளுக்கு பேரானந்தம். அவரை மனதாரப் பாராட்டினார். (இந்த வரலாற்றை டாக்டர் ராமநாதன் அவர்கள் “தியாகையருடன் ஒரு நாள்” என்ற தலைப்பில் இசைப் பேருரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டது) இந்த நிகழ்ச்சி பற்றி எழுதியுள்ள சான்றோர்கள் சிலர், நிகழ்ச்சி பற்றிய சந்தர்ப்பங்களை வேறு விதமாகவும் எழுதியிருந்தாலும், நிகழ்ச்சியின் கருப்பொருள் இதுதான் என்பதால் நடந்தது இதுதான் என்பதை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.

இவர்களைத் தவிர வேறு பல பெரியோர்களும் ஸ்ரீ தியாகராஜரை வந்து தரிசித்து உரையாடி மகிழ்ந்திருக்கின்றனர். சுவாதித் திருநாள் மகாராஜா ஸ்ரீ தியாகராஜரின் பாடல்களை கன்னையா பாகவதர் பாடக் கேட்டிருக்கிறார். ஆகவே அவரை நேரில் காண விரும்பினார். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த தஞ்சை மூவர் எனப்படுபவர்களில் ஒருவரான வடிவேலு என்பவர் மகாராஜாவின் சபையில் ஆஸ்தான வித்வானாக இருந்தார். அவரை மகாராஜா அழைத்து திருவையாறு சென்று ஸ்ரீ தியாகராஜரை சந்தித்து வரும்படி கேட்டுக் கொண்டார். அவரும் திருவையாறு வந்து தியாகராஜர் வாழ்ந்த திருமஞ்சன வீதியில் ஒரு வீட்டில் வந்து தங்கினார். தினமும் ஸ்ரீ தியாகராஜர் காலை மாலை இரு வேளைகளிலும் காவிரிக்குச் செல்வார். அப்படிச் செல்லும் வழியில் இருந்த ஒரு வீட்டில்தான் வடிவேலு தங்கினார். தியாகராஜர் காவிரிக்குச் செல்லும் நேரத்தில் வடிவேலு தன் இல்லத்தில் பாடிக்கொண்டிருப்பார், அது சுவாமிகளின் காதுகளில் விழும். அந்த இசை நயமாக இருந்ததால் தியாகராஜர் சற்று நின்று அவர் பாட்டைக் கேட்டுவிட்டுத்தான் நகருவார். ஒருநாள் தியாகராஜர் அந்த வீட்டினுள் நுழைந்து வருவதைக் கண்ட வடிவேலு, ஓடிவந்து அவரைப் பணிந்து, ஐயனே, தாங்கள் சொல்லியனுப்பி யிருந்தால் நான் வந்திருப்பேனே என்றார். அவரது இசையை தியாகராஜர் பாராட்டிவிட்டு மறுநாள் தன் இல்லத்துக்கு வந்து பாடும்படி கேட்டுக் கொண்டார். பாடியபிறகு அவருக்கு என்ன வேண்டுமோ தயங்காமல் கேட்கலாம் என்றார் தியாகராஜர். இவரும் தியாகராஜரிடம் தான் திருவையாற்றுக்கு வந்த விவரத்தைச் சொல்லி விட்டு அவர் திருவாங்கூர் வந்து மகாராஜாவைச் சந்திக்க வேண்டுமென்றார். குருநாதர் தயங்கிவிட்டுச் சொன்னார், எங்கள் சந்திப்பு நிச்சயம் நடக்கும், ஆனால் அது வைகுண்டத்தில் நிகழும் என்றார். இப்படி பலர் கோவிந்த மாரார் என்பவர் உட்பட பலர் ஸ்ரீ தியாகராஜரை வந்து சந்தித்தனர்.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு சீதாலக்ஷ்மி என்று பெயர் சூட்டி வளர்த்தார். பருவம் வந்த காலத்தில் அந்தப் பெண்ணை திருவையாற்றையடுத்த அம்மாள்அக்ரஹாரத்தில் வசித்து வந்த குப்புசாமி என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தார். அந்தத் திருமணத்துக்காக பலரும், சீடர்கள் உட்பட பல்வகை பரிசுகளை வழங்கினார்கள். அதில் ஸ்ரீ ராமபிரான் சீதா லக்ஷ்மண அனுமன் சமேதராக இருக்கும் ஒரு படமும் வந்தது. அந்தப் படத்தை வாங்கிக் கொண்ட சுவாமிகள் உடனே அதனைத் தன் பூஜை அறைக்கு எடுத்துச் சென்று “நனுபாலிம்ப நடசி வச்சிதிவோ நா ப்ராணநாத” என்னும் கிருதியைப் பாடினாராம். வந்திருந்தவர்கள் அனைவரும் ஆனந்த பரவச நிலையடைந்தார்கள். இந்தப் படம் சுவாமிகளின் உறவினர் ஸ்ரீ பட்டாபிராம பாகவதர் என்பவரின் இல்லத்தில் நெடுங்காலம் இருந்ததாகத் தெரிகிறது. சுவாமிகளின் பெண் சீதாலட்சுமிக்கு தியாகராஜன் என்றொரு மகன் பிறந்தார். சங்கீதத்தில் தேற்சியடைந்த இந்த தியாகராஜன் வயலின் வாத்தியத்திலும் மிகத் தேற்சி பெற்றிருந்தார். குரவம்மாள் என்னும் பெண்ணை மணந்துகொண்ட இவர் தனது முப்பதாவது வயதில் வாரிசுகள் எதுவும் இல்லாமலேயே காலமாகிவிட்டார். எனவே ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு வம்சாபிவிருத்தி யின்றியே போயிற்று.