வீடு கட்ட நினைக்கும் தனுசு ராசிக்கார்ரகள் வழிபட வேண்டிய கோயில்!
கட்டிடக்காரகன் சுக்கிரன் உங்களுக்கு பகையாளியாக இருந்தாலும், பூமிக்காரகனான செவ்வாய் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார். எனவே, புறநகரில் ஒரு கிரவுண்டாவது இடம் இருக்கும். ‘‘இருவது வருஷத்துக்கு முன்னாடி வாங்கிப் போட்டது. இப்போ எப்படி வளர்ந்துடுச்சி’’ என்பீர்கள். உங்கள் ராசிக்கு ஆயுதத்தின் பெயருடைய நகர் இருப்பது நல்லது. வில்லிவாக்கம், வேலாயுதம் நகர், தண்டபாணி தெரு, திரிசூலம் என்பதாக இருந்தால் முன்னேற்றம் எளிதாக இருக்கும். என்னதான் செவ்வாய் உதவினாலும் சொத்து வாங்குவது விற்பது என்றெல்லாம் பெரிய பெரிய ஈடுபாடு காட்ட மாட்டீர்கள். கட்டிய வீட்டை காட்டிலும் நீங்களே இடத்தை வாங்கிக் கட்டுங்கள். விரைவில் குடிபுகுவீர்கள்.
வீட்டு லோன் என்றாலே சின்ன பயம் வருவதை தவிர்க்க முடியாது. ‘‘கையில நாலு காசு சேர்ந்தாலே அந்தக் கடன் இந்தக் கடன்னு பாதி பணம் காலியாகுது’’ என்று புலம்பத் தொடங்குவீர்கள். ‘‘நாப்பத்தெட்டு கேள்வி கேட்பாங்க. இல்லாத வருமானத்தை இருக்கறதா காமிச்சு வேற லோன் வாங்கணும். எனக்கு அப்படி வாங்கறதுல இஷ்டமே இல்லை’’ என்று சொந்த வீட்டுக் கனவை உங்களில் சிலர் சுக்குநூறாக்குவார்கள். வீட்டிற்கு அருகேயே பிள்ளையார் கோயில், சித்தர்களின் பெயரில் தெரு, ஜீவ சமாதிக்கு அருகே வீடு என்று வந்தால் உடனே வாங்குங்கள். பக்கத்திலேயே லேத் கம்பெனி, வெல்டிங், மெக்கானிக் ஷெட் என்று வந்தால் முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள்.
கிழக்கு, வடகிழக்கு, தெற்கு திசைநோக்கி வீட்டின் தலைவாசல் இருப்பது நல்லது. மேலும் ஊரின் இந்த திசைகளிலேயே வீடு இருப்பது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். உங்களின் பால்ய வயதிலேயே சுக்கிர தசை நடப்பதால் 27 வயதுக்குள் வீடு அமையும். நீங்கள் படித்துக் கொண்டிருப்பின் உங்களின் அதிர்ஷ்டம் தந்தையாருக்கு சொத்து சேர்க்கைகளை கொடுக்கும். தனுசு ராசிக்கு வீடு கட்டும் அமைப்பை தருவதே மீனராசியின் அதிபதியான குரு ஆவார். மீனம் என்பது கடல் ராசியாகும்.
எனவே, கடலும், பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் அருளும் தலத்தை தரிசிக்கும்போது நிச்சயம் நீங்கள் நினைக்கும் எண்ணம் வலுப்பெறும்.
சயனக் கோலத்தில் பாற்கடல் பெருமாளாக தரிசனம் தரும் ஆலயங்கள் உங்களுக்கு பொதுவாகவே நன்மை பயக்கும். அதிலும் கடற்கரையோரம் அருளும் பெருமாளாக இருப்பின் இன்னும் அதிக நற்பலன்களை அள்ளித்தரும். எனவே, சென்னை, செங்கல்பட்டுக்கு அருகேயுள்ள மகாபலிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்தல சயனப் பெருமாளை தரிசியுங்கள். எனக்கொரு நல்ல இல்லம் வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
