பைரவ முகூர்த்தம் என்றால் என்ன?

198

பைரவ முகூர்த்தம் என்றால் என்ன?

திருமணத்திற்கான சுப முகூர்த்தம், மைத்ர முகூர்த்தம், சாந்தி முகூர்த்தம், பிரம்ம முகூர்த்தம், கோதூளி முகூர்த்தம், அபிஜித் முகூர்த்தம், சன்னியாச முகூர்த்தம் என்பது போன்ற முகூர்த்தங்களை கேள்விபட்டிருப்போம். ஆனால், பைரவ முகூர்த்தம் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதென்ன பைரவ முகூர்த்தம் என்று தானே நினைக்கிறீர்கள்!…

ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். இப்படி 4 நாழிகைகள் சேர்ந்தது ஒன்றரை மணி நேரம். இது ஒரு முகூர்த்தம். காலம் மற்றும் இடத்தை பொறுத்து முகூர்த்தத்தின் கால அளவு மாறுபடும். உதாரணமாக, சன்னியாசி ஒருவர் பசு மாடு பால் கறக்கும் நேர அளவிற்குத்தான் ஒரு வீட்டின் முன்பு பிச்சை எடுப்பதற்காக நிற்கலாம் என்பது சன்னியாச முகூர்த்தம்.

கோதூளி முகூர்த்தம் என்பது பசு மாடுகள் காலையில் புல் மேய்வதற்காக செல்லும் நேரம். எனவே இத்தகைய முகூர்த்தங்களுக்கு இத்தனை மணி, நிமிடம் என்ற கால வரையறையை நிர்ணயிக்க முடியாது. சித்தர்கள் கணக்கில்
பிரம்ம முகூர்த்தம் என்பது விடியற் காலையில் மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரைக்கும் உள்ள நேரம். அபிஜித் முகூர்த்தம் என்பது நண்பகல் நேரமாகும்.

இத்தகைய முகூர்த்த நேரத்தின் இடையில்தான் சித்தர்கள் கணக்கிடும் அமிர்த நேரம் என்ற சித்த முகூர்த்தங்கள் அமைகின்றன. சித்தாமிர்த நேரம் ஒரு நிமிடம் மட்டுமே அமையும். அதுபோல பைரவ முகூர்த்தம் என்ற அற்புதமான முகூர்த்த நேரம் உண்டு. சூரிய உதயத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நான்கு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் எனப்படும்.

காலை சூரிய உதயம் 6 மணி 12 நிமிடம் என்று எடுத்துக் கொண்டால் சூரிய உதயத்திற்கு முன்னால் உள்ள நான்கு நிமிடங்களும் சூரிய உதயத்திற்குப் பின் உள்ள நான்கு நிமிடங்களும், அதாவது 6 மணி 8 நிமிடத்திலிருந்து 6 மணி 16 நிமிடம் வரை உள்ள எட்டு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம்.

சூன்ய திதி, அசம்பூர்ண நட்சத்திரங்கள், பகை ஹோரைகள் போன்ற பற்பல பஞ்சாங்க தோஷங்களைக் களையக் கூடிய சக்தியை கொண்டது அபிஜித் போன்ற விசேஷ முகூர்த்தங்கள் ஆகும். இவ்வாறு பைரவ முகூர்த்த நேரத்தில் இயற்ற வேண்டிய வழிபாடுகள் ஏராளமாக உண்டு.

அந்த வழிபாடுகள் நாம் காலத்தை முறையாகப் பயன்படுத்தாத தோஷங்களுக்கு பரிகாரமாக அமைகின்றன. இந்த பைரவ முகூர்த்த வேளையில் பைரவ வழிபாடு சிறப்பானது. இந்த நித்திய பைரவ முகூர்த்த வேளையில் பைரவரை மனதார நினைத்து வழிபட்டால் அந்த நாளில் நடைபெற இருக்கும் துன்பங்களை, ஆபத்துக்களை பைரவர் நீக்கிவிடுவார் என்பது நம்பிக்கை.