ஸ்ரீ ஷிர்டி பாபாவின் வரலாறு

775

எங்கு, எப்போது தோன்றினார் என்பதை வரையறுக்க இயலாமல் சுயம்பு மூர்த்தமாய் அவதாரம் செய்தவர் ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா. இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட முதல் அவதார புருடர். பல்வேறு லீலைகள் செய்தவர். பல மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்த்தவர். இன்றும் ஷிர்டி தலத்திற்கு தம்மை நாடி வருவோரின் பிரச்சனைகளை சுட்சுமமாக இருந்து தீர்த்துக் கொண்டிருப்பவர்.
இந்து-இஸ்லாம் என இரு மதத்திற்கும் பாலமாய்த் தோன்றிய இம்மகான் வசித்தது ஒரு மசூதியில். கொண்டாடியது ராம நவமி உட்பட பல இந்துப் பண்டிகைகளை. ’சந்தனக் கூடு’ என்று தமிழகப் பகுதிகளில் அழைக்கப்படும் ’உரூஸ்’ ஊர்வலத்தையும் அவர் நடத்தி வந்தார். அவர் வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்ததோ ‘அல்லா மாலிக்’ என்ற அல்லாஹின் திரு நாமத்தை. இந்துக்களும் அவரது பக்தர்களாக இருந்தார்கள். இஸ்லாமியர்களும் அவர் பக்தர்களாக இருந்தார்கள். அவர் நடத்திய விழாக்களில் கலந்து கொண்டார்கள். எல்லோருக்கும் அவர் ’பாபா’. பாபா என்ற சொல்லுக்கு தந்தை என்பது பொருள்.
பாபா சமாதி (ஷிர்டி)
ஷீர்டியில் சாயி பாபா முதன்முதலில் பதினாறு வயது இளைஞனாகக் காட்சி கொடுத்த இடம், புனிதமான ஒரு வேப்பமரத்தடி ஆகும். அதுதான் குருஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மரத்தடிக்கு அருகில், பூமிக்கு அடியில் அமைந்துள்ள ஓர் அறையில்தான், தன் குரு வாழ்ந்து வந்ததாக பாபா கூறியுள்ளார். அங்கு எப்போதும் அணையா விளக்கு எரிய வேண்டும் என்பது அவரது ஆக்ஞை.
தான் தங்கியிருந்த மசூதியிலிருந்து, தான் உருவாக்கிய தோட்டத்துக்குச் செல்லும்போது குருஸ்தானத்தில் சிறிது நேரம் நின்று, தன் குருவை வணங்கி விட்டுச் செல்வது அவரது வழக்கம். குருஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ள சலவைக் கற்களால் ஆன இரு பாதங்களும், பாபாவின் படமும் அவரது வாழ்நாளிலேயே அவரது ஆசியுடன் வைத்து பூஜிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேகா என்ற ஷீர்டி பக்தருக்கு பாபா வழங்கிய சிவலிங்கம்தான் குருஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீ ஷிர்டி சாயிபாபா
துவாரகாமாயீயில் பாபாவால் ஏற்றி வைக்கப்பட்ட அக்கினி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அதில் விறகுக் கட்டைகளைப் போட்டு எரித்துக் கொண்டிருப்பார் பாபா. அதன் முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம். தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து ’உதி’ என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்துத் தருவார். இந்த ’உதி’ மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாவித ஊழ் வினைகளையும், வியாதிகளையும், சகல பாவங்களையும் போக்கவல்லது.
”எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன்.
என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன்.
எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ அவன் பாரத்தை நான் சுமக்கின்றேன்.
எவன் தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னை தியானம் செய்கின்றானோ, எவன் தன் துன்பங்களை என்னிடம் ஒப்புவிக்கின்றானோ, எவன் சாயி நாமத்தை தினமும் ஜெபிக்கின்றானோ, அவன் பேத, பாவங்களில் இருந்து விடுபட்டு என்னையே அடைகின்றான். அவன் வேறு நான் வேறு அல்லாமல் அவனை உயர்த்துவேன்.
கலங்காதே! நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்.
இந்த ஷிர்டி மண்ணை எவன் ஒருவன் பக்தியுடன் மிதிக்கின்றானோ அவனது பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு நீங்கி விடும்“
இவை பகவான் பாபாவின் புனித வாக்குகளாகும்.
ஷிர்டி பாபா குருஸ்தான்
பாபா 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி அன்று பகல் 2.30க்கு மகா சமாதி அடைந்தார். அன்று விஜயதசமி நன்னாள். பகவான் பாபா தனது மகாசமாதிக்கு விஜயதசமி புனித நாளைத் தேர்ந்தெடுத்தலிருந்தே அந்நாளின் புனிதத்தையும், பெருமையையும் நாம் அறிந்து கொள்ளலாம். வருடந்தோறும் அங்கு அப்புனித நன்னாளில் மிகச் சிறப்பாக குரு பூர்ணிமா விழா கொண்டாடப்படுகிறது.
பகவானின் பாதம் பணிவோம். பாவங்களைக் களைவோம்