ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ஸ்பெஷல் !

461

ராமானுஜன் என்றால் ராமனுக்கு அடுத்தவன் என்று பொருள்படும். அது லட்சுமணன் தானே! தன் வாழ்க்கையை தொண்டிலே துறந்த இல்லற துறவி அவன்! ராமானுஜரும் இல்லறத்திலிருந்து துறவி ஆனவர் தான் தொண்டிற்காக!

ராமானுஜர் என்னும் மகான் பாரத மண்ணின் தவப் புதல்வனாய் வாழ்ந்து காட்டியவர்! சிறந்த சமயவாதி. ஏற்றத் தாழ்வுகளை தகர்த்தெறிந்த தத்துவஞானி. சாதி என்னும் கோட்டையில் சமயம் சிறைபட்டிருந்ததை சங்கிலியை சிதைத்தவர். சீர்திருத்தம் செய்தவர்! சமயத் தொண்டையும் சமூகத் தொண்டையும் இரு கண்களில் ஒரு பார்வையாகப் பார்த்தவர். வன்தமிழ் மொழியிலும் வடமொழியிலும் வளமான புலமை கொண்டவர்.

அவர் நமக்கு அருளிய நூல்கள் 1. வேதாந்த சங்கரகம் 2. வேதாந்த தீபம், 3. வேதாந்த சாரம் 4. ஸ்ரீ பாஷ்யம் 5. கீதா பாஷ்யம் 6. சரணாகதி கத்யம் 7. ஸ்ரீ ரங்க கத்யம் 8. ஸ்ரீ வைகுண்ட கத்யம் 9. நித்யம். ஆனால் இவையெல்லாம் வடமொழியில் அமைந்திருக்கிறது என்ற ஒரு குறைபாடு உள்ளது! அதனால் அவருக்கு தமிழ் தெரியாது என்பது பொருள் அல்ல! அவர் குலசேகர ஆழ்வாருக்கும் நம்மாழ்வாருக்கும் திருமங்கையாழ்வாருக்கும் அருளியுள்ள தனிப்பாடல்களை (தனியன்கள்) சான்று!

இது மட்டுமல்லாமல் பல நூலாசிரியர்கள் ராமானுஜருடைய கோட்பாடுகளையும் கொள்கைகளையும் தத்துவங்களையும் முன்னிறுத்தி பல நூல்களைப் படைத்து உள்ளார்கள். இதில் போற்றத்தக்கவர்கள் சீர் பராசர பட்டர் பிள்ளை வேதாச்சார்யர், அழகிய மணவாள நாயனார், சோமாசியாண்டான், நம்சீயர், நலன்திகழ் நாராயண தாசர் போன்றவர் ஆவார்கள்.

ராமானுஜ நூற்றந்தாதி!

ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே பாடப்பெற்ற நூல் என்ற பெருமை இந்நூலுக்கு உண்டு. திருவரங்கனே கேட்டு மகிழ்ந்ததால் இது ‘நாலாயிர திவ்ய பிரபந்த’த்தில் ஒரு பிரபந்தமாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆழ்வார் அல்லாதவரின் நூல் பிரபந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது ஒரு தனிச் சிறப்பு. இன்றும் வைணவர்கள் தினமும் சேவிக்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. அதுமட்டுமா? எல்லா திருக்கோயில்களிலும் பாடப் பெறுகின்ற பெருமையும் உண்டு. ஒவ்வொரு பாடலிலும் ராமானுஜர் என்று சொல்லபடுவதால் இதைப்பாடி முடித்தால் 108 முறை ராமானுஜர் என்று அழைத்த பாக்கியம் கிடைக்கும். அதனால் இதற்கு ‘பிரபன்ன காயத்ரி’ என்ற சிறப்பும் உண்டு.

யதிராச வைபவம்!

இந்நூல் ராமானுஜரின் நேரடி உதவியாளராக தொண்டு புரிந்தவரால் எழுதப்பட்டது என்ற பெருமை உண்டு. வடுகநம்பி தான் ராமானுஜரிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டவர். அவருக்கான உணவு, உடை, ஏவல் பணிகள் அத்தனையும் செய்யக்கூடிய ஆந்திர தேசத்துக்காரர், அந்தரங்க அடியாராக இருந்தவரின் வாக்குமூலம் அல்லவா இந்த நூல்!

தாடீபஞ்சகம்!

ராமானுஜரின் நேரடி சீடராகவும் அவர் தம் பவித்ரமாகவும் கருதப்பட்டவர் கூரத்தாழ்வார். திருவரங்கத்து அமுதனார் இவரைக் குறிக்கும் போது மொழியைக் கடக்கும் பெரும்புகழான் என்று வர்ணிக்கிறார். மிகச் சிறந்த அறிஞர், செல்வந்தர், மிக உயர்ந்த குலத்திலே பிறந்தவர் என்ற பெருமையை உடையவராக இருந்தாலும் உடையவரே உதைக்கின்ற அளவிற்கு தன்னைத் தாழ்த்திக் கொண்டவர்! ராமானுஜர் தோன்றியதே பொய் மதங்களை அழிப்பதற்காக என்பதை மிக அற்புதமாக தன் நூலில் காட்டுகின்றார்!

பாஷண்டர்களாகிற வனத்தில் பரவிய காட்டுத் தீ போன்றவரும் சார்வாக மதத்தினராகிய மலைகளுக்கு இடி போன்றவரும் பௌத்தர்களாகிற இருளுக்கு ரவி போன்றவரும் சைனர்களாகிற யானைகளுக்கு சிங்கம் போன்றவரும், மாயாவாதிகளாகிற சர்ப்பங்களுக்குக் கருடன் போன்றவரும் ஸ்ரீரங்க நாதனுடைய சீர் ரங்க சீரை இந்த ராமானுஜர் முனிவர் ஒப்புயர்வற்ற சான்றோராகத் திகழ்கிறார்.

உடையவரின் அவயவ ப்ரபாவ அஷ்டகம்!

மணவாள மாமுனிகளின் முதல் சீடராக இருந்த வானமாமலை சீயரால் அருளப் பெற்றது. 8 சுலோகங்களை கொண்டது என்பதல்லாமல் ராமானுஜரின் முடி முதல் அடிவரையில் எழுதப்பட்ட ஒரு நூல். அவருடைய அவயங்களாக நம்மாழ்வார் முதற்கொண்டு அவருடைய சீடர்கள் பிள்ளை உறங்காவில்லிதாசர் வரையில் எந்தெந்த நிலையில் இருக்கிறார்கள் என்று வர்ணிக்கப்பட்டுள்ள நூல்!

எதிராச விம்சதி!

மணவாள மாமுனிகளால் அருளப்பெற்ற ஒரு நூல். அவரின் சீடர் இந்நூலின் அறிமுகத்தை இப்படிச் சொல்கிறார். இச்சேதனனை நாம் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை என்றிருக்கும் எம்பெருமானாரை இப்பிரபந்தத்தை திருச்செவிசாற்றியவுடனே அவனுக்கு அருள்புரியாது நிற்க ஒண்ணாதபடி பண்ணுவிக்கும் என்பதாகும். திருவரங்கத்தமுதனாரும் சுரக்கும் திருவும் உணர்வும் என்று அருளியுள்ளார்.

ஆர்த்திப் பிரபந்தம்!

இதுவும் மாமுனிகள் அருளிய அழகு நூல். மாமுனிகளுக்கும் உடையவருக்கும் இடையே நடக்கும் ஊடல் பிரபந்தம் தான் இது. ராமானுஜரிடம் ஒரு தர்க்கப் போராட்டத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் இதில் அமைத்துள்ளார். அவர் மீதுள்ள தார்மீகக் கோபத்தை மிகச் சிறப்பாகக் காட்டியுள்ளார். தந்தை, மகன், தாய், குழந்தை என்ற உறவுகளிலே!

இது முடிவல்ல ஆரம்பம். ஒரு மகான் வாழ்ந்து அவர்தம் வரலாறும் கோட்பாடுகளும் கொள்கைகளும் மற்ற அறிஞர்களால் கொடிகட்டி பறப்பதை அல்லவா பார்க்கிறோம்.

இவர் அல்லவா காவி(ய)த் தலைவன்!

ஆசார்யன் திருவடிகளே சரணம்.